Friday, July 1, 2011

Story by Sree Ramakrishna - Seven jars filled with Gold


ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன குட்டி கதை 
பூதம் காத்த பணம்
ஓர் ஊரில் ஒரு மரத்தில்  ஒரு யக்ஷன் வாழ்ந்து வந்தான்.     ஒரு நாள் அவ்வழியாக ஒரு நாவிதன் செல்லும் போது 'உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?' என்ற குரல் கேட்டது.   நாவிதன் சுற்றும் முற்றும் பார்த்த போது யாரும் கண்ணில் தென்படவில்லை.  ஏழு ஜாடி தங்கம் என்பது காதில் விழுந்ததால், பேராசை கொண்டு "ஆம் எனக்கு வேண்டும்"  என்றான்.    "நீ வீட்டுக்கு போகலாம், உன் வீட்டில் ஜாடிகளை வைத்து விட்டேன்" என பதில் குரல் ஒலித்தது.       உடனே அவன் வீட்டை நோக்கி தலை தெறிக்க ஓடினான்.    ஏழு ஜாடிகளையும் அவசரமாக திறந்து பார்த்தான்.   ஆறு ஜாடிகளில் வழிய வழிய தங்கம் நிறைந்து இருந்தது.     ஏழாவது ஜாடியில் மட்டும் பாதி அளவுக்குத்தான் இருந்தது.     அதை எப்படியாவது நிரப்பிவிட வேண்டும் என்று நினைத்த அவன், தன்னிடம் இருந்த தங்க மற்றும் வெள்ளி நகைகளை விற்று, தங்க நாணயங்களாக மாற்றி ஏழாவது ஜாடியில் வைத்தான். ஆனால் அந்த மாய ஜாடியோ முன் போலவே அரை குறையாகவே இருந்தது.    தானும் குடும்பமும் பட்டினி கிடந்து சேமித்த பணத்தாலும் ஜாடியை நிரப்ப முடியவில்லை.  அரசனிடம் வேலை பார்த்த நாவிதன் அவரிடம் பெரும் சம்பளத்தை இரட்டிப்பாக்க கோரினான்.   அரசனும் சம்மதித்தான். அதிகமாக பெற்ற சம்பளத்தையும் ஜாடியில் போட்டு நிரம்பவில்லை.    வேலை செய்த நேரம் தவிர பிச்சை எடுத்தும், அதை பொன்னாக்கியும் ஜாடி நிரம்பாமல், கவலையுற்றான்.     அவன் நிலை வர வர மோசமாகி பரிதாபகர நிலையை அடைந்தது.     ஒரு நாள் அரசன் நாவிதனை பார்த்து "உனக்கு என்ன வந்தது?   இரண்டு மடங்கு சம்பளம் பெற்று கூட மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறாயே, ஏழு ஜாடி தங்கத்தை வாங்கி கொண்டாயா என்ன" என்று கேட்டான்.     வியப்புற்ற நாவிதன் அரசனுக்கு எப்படி தெரியும் என்றான்.    அதற்கு அரசன் யக்ஷன் கொடுத்த பணத்தை செலவழிக்க முடியாது என்று உனக்கு தெரியாதா?  என்றும் மேலும் அது இன்னும் அதிகமாகவே அதை சேர்க்க தூண்டும் என்றும் கூறினான். 
நாவிதன் மீண்டும் மரத்தடிக்கு சென்று ஜாடிகளை நீயே எடுத்துகொள் என்றான்.      நல்லது என்று குரல் ஒலித்தது.   வீடு திரும்பியவுடன் ஏழு ஜாடிகளும் மாயமாய் மறைத்திருந்தது.   வாழ்நாள் முழுவதும் அவன் அரும்பாடுபட்டு தேடிய செல்வம் முழுவதும் போய்விட்டது.    கடவுளின் ராஜ்யத்திலும் சிலருடைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது.     உண்மையான வரவிற்கும் உண்மையான செலவிற்கும் வேறுபாடு தெரிந்து கொள்ளாதவர்கள், தங்கள் பெற்றுள்ள அனைத்தையும் இழந்து விடுகிறார்கள்.   

No comments:

Post a Comment