Bhagavan Sri Ramakrishna's short stories --- Dasi's slaves
தாசியின் தாசன்
எல்லோரும் வேலைக்கு போகும் காலமாக இருப்பதால், ஒரு ஏழை பிராமணனுக்கு வேலைக்கு போக ஆசை உண்டாயிற்று. ஆனால் வேலை ஒன்றும் கிடைக்கவிலை. வறுமையிலும் துன்பத்திலும் வாடினான்.
பல முறை ஒரு கம்பெனி மேனேஜெரைச் சந்தித்து தனக்கு எதாவது ஒரு வேலைக் கொடுக்கும்படி மன்றாடி கேட்டுக் கொண்டிருந்தான். அவரோ பல விதமாக இவனுக்கு பதில் கூறியவாறு இருந்தார். "நாளை வந்து பார்", "பிறகு பார்க்கலாமே" போன்ற பதில்களில் சலித்து போன அவன் தன் சிரமங்களை தன் நண்பன் ஒருவனிடம் சொல்லி வருந்தினான். "கால்கள் தேய ஏன் மேனேஜரை பார்க்க அலைகிறாய்? முட்டாளாக இருக்கிறாயே! இப்பொழுதே ரோஜாரமணியிடம் போய் கெஞ்சிக் கேள். உன் நிலைமையை எடுத்து சொல். நாளைக்கே உனக்கு வேலைக் கிடைத்துவிடும் பார்" என்று நண்பன் சொன்னான். ஆச்சரியம் அடைந்த ஏழைப் பிராமணன் "உண்மையாகவா சொல்கிறாய். அப்படியானால் நான் உடனே அவளிடம் போகிறேன்" என்று சொல்லிவிட்டு ரோஜாரமணியை பார்க்க விரைந்தான். அந்த அம்மையார் வேறு யாரும் இல்லை - மேலே குறிப்பிட்ட கம்பெனி மேனேஜெரின் ஆசை நாயகி தான் அவள்.
ஏழை பிராமணன் அவளை அணுகி "தாயே! வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். குடும்பமே பட்டினி கிடந்தது சாகக் கிடக்கிறார்கள். என் மீதும் என் குடும்பத்தின் மீதும் கொஞ்சம் கருணைக் காட்டுங்கள். தங்களை தவிர வேறு கதியே எனக்கு கிடையாது. நீங்கள் ஒரு வார்த்தைச் சொன்னால் போதும். எனக்கு வேலைக் கிடைத்துவிடும்" என உருக்கத்தோடு சொன்னான்.
இரக்கமுற்ற ரோஜாரமணி "நான் யாரிடம் சொன்னால் வேலைக் கிடைக்கும் என்று கூறுகிறாய்" என்றாள். அவனோ, கம்பெனி மேனேஜரைப் பற்றி முழு விவரத்தையும் கூறினான். அவளும் வேலை வாங்கி தருவதாக கூறினாள். ஆச்சரியம் என்ன வென்றால், மறு நாள் காலையே மேனேஜரின் சேவகன் ஏழை பிராமணனிடம் வந்து வேலைக்கு வருவதற்கு கூறினான். ஆக அவனுக்கு வேலைக் கிடைத்து விட்டது. மேனேஜர் இவ்வாறு தனது மேலதிகாரிக்கு சிபாரிசுக் கடிதம் எழுதி இருந்தான். "இவன் சிறந்த தகுதிகள் பெற்றிருக்கிறான். இவனால் நிறுவனத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஆகவே இன்று முதல் வேலைக் கொடுத்திருக்கிறேன்."
உலகம் இவ்வறு பெண்ணாசையில் மயங்கி கிடக்கிறது. மாயை என்பது என்ன? ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் காமம் தான் அது.
No comments:
Post a Comment